சென்னை, ஜன. 19–
அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே மாதம் நடைபெற உள்ள நிலையில் கவர்னர் உரையுடன் கூடிய கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத் தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால், கவர்னர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் வாய்ப்பு உள்ளது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. கவர்னர் உரை அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார்.
சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் கவர்னரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டு இருக்கும். சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும்.
முழுமையாக வாசிக்கப்பட்ட
கவர்னர் உரை
தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அனேகமாக, வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
நாளைய கூட்டத்தில் கவர்னர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.
பாதியிலேயே வெளியேறிய
கவர்னர்
2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்பது கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஆளும் கட்சிக்கு
கடும் சவாலான கூட்டம்
மேலும் தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை, பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகள் எழுப்ப எதிர்கட்சியான அண்ணா தி.மு.க.வும், அதன் கூட்டணியில் உள்ள பாஜகவும் அமளியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அரசியல் பரபரப்புகளுக்கிடையே நாளை துவங்கம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
![]()





