செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

Makkal Kural Official

சென்னை, டிச.29-

தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள என்.கே.திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்டெல்லா மாரிஸ் மற்றும் எஸ்.ஐ.இ.டி. கல்லூரிகளில் நடந்த முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடமும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் ேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்தப் வடிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 251, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 281, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 587 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான நேற்று முன்தினம் 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1 லட்சத்து 85 ஆயிரத்து 277 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2-வது நாளாக நேற்றும் முகாம் நடந்தது.

2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்தனர்.

தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயடைந்து உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாத வர்களுக்காக வருகிற 3 மற்றும் 4-ந்தேதி களில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *