சென்னை, ஜன. 14–
“பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது. வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் என்பதே அதன் ஐதீகம். பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். அதிகாலை 4 மணிக்கே மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வீட்டு வாசலில் போட்டு தீயிட்டு கொளுந்தினர். சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாக நடனம் ஆடினர்.
பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சென்னையில்
காற்று மாசு அதிகரிப்பு
பனிப்பொழிவுடன், புகைமூட்டம் அதிகாரித்ததால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து அதிகமாக இருந்தது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத நிலையை எட்டி இருந்தது. குறிப்பாக ஆழ்வார் நகர்,அன்னை சத்யா நகர், டேவிட்புரம், கொடுங்கையூர், பெரவல்லூர், பெருங்குடி மற்றும் பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 500-ஐ கடந்து மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. அபிராமபுரம், ஆலந்தூர், அரும்பாக்கம், காந்தி நகர் எண்ணூர், கொரட்டூர், மணலி,நீலாங்கரை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் 200 முதல் 400 புள்ளிகளை கடந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், காறின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சராசரியாக காற்றின் தரம் 305 புள்ளிகளை எட்டியுள்ளது. சுவாசிக்க ஏதுவான காற்றின் தரநிலைக்குறியோடு 0 முதல் 50 ஆகவும், ஏற்றுக்கொள்ளும் வகையில் 50 முதல் 100 வரையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலை நேர நிலவரப்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தா காற்றின் தரக்குறியீடு 500 புள்ளிகளை கடந்து இருந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல தற்போது 199 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதுதொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()





