செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

Makkal Kural Official

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல்

சென்னை, ஜூலை 12–

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் .

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட் வெளியிட்டது. சென்னையைப் பொறுத்த வரை 311 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்றும், இதில் 94 ஆயிரத்து 848 பேர் பங்கேற்பதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு பணியில் நான்காயிரத்து ஐநூறு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.

வினாத்தாள் கசிவா?

இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின் போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பஸ்களில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் ஷீட் ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனியார் பஸ்களில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

314 தேர்வு மையங்கள்

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள் சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலதாமதாக வந்தவர்களை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

3 மாதத்தில்

தேர்வு முடிவுகள்

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *