செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Makkal Kural Official

புதுடெல்லி, நவ.12-

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அரசியலமைப்புச் சாசனத்தின் 14, 19, 21, 325, 326 ஆகிய பிரிவுகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்கு செலுத்த முடியாத நிலை உருவாகும்.

இது அரசமைப்புச் சாசனம் கூறியுள்ள நியாயமான, நேர்மையான தேர்தல் என்பதை பாதிக்க செய்யும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தேசிய குடிமக்கள் பதிவேட்டை போல உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்காக தேர்தல் கமிஷனின் அறிவிக்கை தன்னிச்சையானது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் கமிஷன் கடந்த 27-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் வக்கீல் சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வக்கீல் ஸ்ரீராம், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா சார்பில் வக்கீல் தேவ்யானி குப்தா, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சார்பில் வக்கீல் ராதா ஷ்யாம் ஜனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சார்பில் வக்கீல் பிரசன்னா ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, தி.மு.க. சார்பில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு இது உகந்த நேரம் அல்ல. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. அறுவடை நேரமும் கூட. அதோடு, முக்கிய பண்டிகை காலம் இது. எனவே, இது சாதகமற்ற நேரம். குறிப்பாக, ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்” என வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசியல் கட்சிகள் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான நடைமுறை பற்றி பயப்படக்கூடாது. தேர்தல் கமிஷன் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்கும். இதில் ஏதாவது தவறு இருப்பதாக நாங்கள் உணர்ந்தால், தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான முழு நடைமுறையையும் ரத்து செய்வோம். தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான இந்த மனுக்களுக்கு வருகிற 24-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஐகோர்ட்டுகளில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *