செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:

Makkal Kural Official

சென்னை, நவ.10-

தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டுள்ளது என்றும், எனவே தலைமை டி.ஜி.பி.யை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. தீயசக்தி தி.மு.க.வின் காட்டாட்சி தர்பார் இன்று வரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனு தினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம்.

மமதை

பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால விடியா தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம்; தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.

அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை. மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த விடியா திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.

வெட்கக்கேடு

* சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும்; அவர்களுக்கு சுமார் 104 கோடி ரூபாயை நிவாரணமாக மாநில அரசு வழங்கி உள்ளதாகவும் கூறி இருப்பது, தமிழ் நாட்டின் சட்டம்–ஒழுங்கு தோல்வியின் வெளிப்பாடா? அல்லது வெட்கக்கேடா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 104 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் குறிப்பிட்டது அரசின் சாதனையா? அல்லது சட்டம்–ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? என்பதை அமைச்சர் தான் விளக்க வேண்டும்.

4 மாதங்களில்

501 கொலைகள்

* ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கடந்த 4 மாதங்களில், தமிழ் நாட்டில் சுமார் 501 கொலைகளும், சுமார் 156 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

* செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்களே, அண்டை மாநிலப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது.

* சென்னை அடையாறு அருகே காந்தி நகரில் குணா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.

* தேனி அருகே இரண்டரை சவரன் தங்க நகைக்காக இளைஞரை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியது.

* திருப்பூரில் மதுபோதையில் அசாம் இளைஞரை வெட்டிக் கொன்றது.

* தாராபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 70 வயது முதியவர் கல்லால் அடித்து கொலை.

* வட மாநிலங்களில் குழந்தைகளின் உயிரைக் குடித்த நச்சு இருமல் மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளரை மத்திய பிரதேச காவல்துறை கைது செய்யும் வரை செயலற்றிருந்த தமிழகக் காவல்துறை.

போலீஸ் நிலையம் அருகே கொலை

* சென்னை அசோக் நகரில் காவல் நிலையம் அருகே 38 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை.

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு தலைவியின் கணவர் பள்ளியின் அனைத்து சாவிகளையும் வைத்துக்கொண்டு, பள்ளி வகுப்பறைகளை தவறாகப் பயன்படுத்தியது.

* இம்மாதம், கடலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி கண்ணபிரான் பாண்டியன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல் வாகனத்தில் ஏற்றியபின் ரவுடியின் ஆதரவாளர்கள் காவல் வாகனத்தை பின்தொடர்ந்ததால், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நெல்லை காவலர்கள்.

ரவுடிகள் அட்டகாசம்

* நவம்பர் 1ம் தேதி இரவு முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில், கஞ்சா போதையில் இளைஞர்கள் தெருவில் சென்றவர்களைத் தாக்கிய சிசிடிவி காட்சியை வெளியிட்ட வீட்டு உரிமையாளர்களைக் கைது செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. வீடுகள், தனியார் மற்றும் அரசு அலுவல கங்களில் சிசிடிவி வைக்க காவல்துறை அறிவுறுத்திய நிலையில், சிசிடிவி–யில் பதிவாகி உள்ள ரவுடிகளின் அட்டகாசத்தை வெளியிட்டால், ரவுடிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, வீட்டு உரிமையாளர்களை மிரட்டுவதா காவல் துறையின் மரபு? இதுபோல் செய்தால் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல யார் முன்வருவார்கள்? இதுதான் பொம்மை முதலமைச்சர் தலைமை வகிக்கும் காவல் துறையின் லட்சணமா?

* கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது.

* இன்றைய நாளிதழ்களில், தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கிடையே போதை மருந்து கடத்தல் மாபியாவின் கிங்பின் என்று கருதப்படும் செனகல் நாட்டு பிரஜை – பென்டே என்பவனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது.

இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லாத நிலை எல்லாம் பார்க்கும்போது, விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழகம் தலைகுனிந்தது

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது’. புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்திலும்; தொடர்ந்து எனது தலைமையிலான அம்மா அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது.

விடியா திமுக ஆட்சியில் நிரந்தர டிஜிபி இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் டிஜிபி பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், விடியா திமுக அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடக்கூடிய ஜூனியர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய தேர்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக டிஜிபி–யை நியமித்துள்ளார் பொம்மை முதலமைச்சர். தமிழகத்தில் டிஜிபி நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விடியா திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ்நாடு அரசுக்கு 3 வார காலத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, புரட்சித் தலைவரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

‘‘காட்டு புலியை வீட்டில் வைத்தாலும்,

கறியும், சோறும் கலந்து வைத்தாலும்,

குரங்கு கையில் மாலையை கொடுத்து

கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்,

மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது’’

என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.

நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை டிஜிபி ஆக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *