செய்திகள்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 2–

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோயில் ஊழியர் அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இருப்பது வழக்கம் என்ற நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். குற்றசம்பவங்கள் நடைபெறும் பொழுது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். தனிப்படைகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *