செய்திகள்

தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது: அண்ணாமலை தாக்கு

Makkal Kural Official

சென்னை, அக். 31–

தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, ‘தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர்’ என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

தி.மு.க.வின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது தி.மு.க.வின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உழைக்கும் பீகார் மக்களைத் தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, நமது பிரதமர் தமிழகத்தில், பீகார் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. எப்படி, தி.மு.க.வினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் தி.மு.க.வினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *