செய்திகள்

‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி டெல்லிக்குச் சென்றது ஏன்?’’ டிடிவி தினகரன் கேள்வி

Makkal Kural Official

சென்னை, செப். 16 –

‘‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“நன்றி மறப்பது நன்றன்று என எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார். அண்ணா திமுகவை காப்பாற்றியது பாஜகதான் என பழனிசாமி பேசுகிறார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அவரை மாற்றிவிட்டு வி.கே. சசிகலாவை முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அதன்பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கி சென்றார்.

அப்போது தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பழனிசாமியை காப்பாற்றியது. அண்ணா திமுகவின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான். அவர்களில் 18 பேர் பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை என்றுதான் ஆளுநரிடம் மனுகொடுத்து அவரை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இல்லை. அன்றைக்கு நடந்த பிரச்சினை என்னவென்று நமக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

நன்றி மறந்தவர்

எடப்பாடி

எனது சித்தி வி.கே. சசிகலா , பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்து தான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட மாட்டார்கள். கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு சசிகலா சிறைக்குச் சென்றபோது, 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் வெளியேற இருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் என்பது அவருக்கே தெரியும். எடப்பாடியை எல்லாம் முதல்வராக ஏற்க முடியாது எனச் சொல்லி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். செம்மலை எல்லாம் சுவர் எகிறிக் குதித்து ஓடினார். அவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து, அவர்கள் வாக்களித்ததாலேயே எடப்பாடியால் முதல்வராக முடிந்தது. ஆனால், அந்த நன்றியை எல்லாம் மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தோற்றால்

நான் காரணம் இல்லை

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்?. செங்கோட்டையனை கைக்கூலி என்று கூறுகிறார். அவர் யாரை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். தோல்வி பயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி உளறுகிறார். இந்த முறை திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி மனநிலையில் இருக்கிறது என்று தெரியும் இது மட்டும் தான். இந்த 4 கூட்டணி தான் தேர்தலில் களம் இறங்கும். அதிமுகவின் 20 சதவீத வாக்குகள் 10 சதவீதமாக குறைய போவது உறுதி. அதிமுக தோற்றால் நான் காரணம் இல்லை. பழனிசாமி படுபாதாளத்துக்கு தள்ளப்படுவார். டெல்லியில் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் பெரிதாக தெரியலாம். ஆனால் தற்போது வாக்கு சதவீதம் நிச்சயம் குறையும். அதிமுக கூட்டணிக்கு அமமுக உறுதியாக செல்லாது. பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். அமமுக பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *