செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

Makkal Kural Official

சென்னை, அக். 26–

தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. எழுப்பியக் குரலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியிருப்பதன் மூலம் சமூகநீதிக்கு எதிரான தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது.

அக்டோபர் 17–ந்தேதி விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் அவசரமாக இந்த மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.

திமுக அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக முதன்முதலில் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய குரல், தமிழகத்தின் கல்வியாளர்கள், பேராசிரியர் அமைப்புகள், சமூக நீதியாளர்கள் மற்றும் சில கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான கொந்தளிப்பாக மாறியது. அது அடக்க முடியாத எதிர்ப்பு சுனாமியாக மாறிவிடும் என்பதை உணர்ந்த தி.மு.க. அரசு, இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் 2025ம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டங்கள் வெற்றி பெறாது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்திருக்கிறது.

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படுமா, இல்லையா? என்பதை சமூக நீதியை படுகொலை செய்யும் திமுக அரசு விளக்க வேண்டும்.

மருத்துவம் தவிர்த்த பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும்.

புதிதாக சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் தொடர வேண்டும் என சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கும்.

தனியார் கல்லூரிகள் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களாக மாறிவிடும்.

இவை அனைத்துக்கும் மேலாக, கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு மட்டுமே கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் வகை செய்த நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதற்கு அரசு துடித்தது ஏன்?

ஏராளமான தனியார் கல்லூரிகள் என்ன விலை கொடுத்தாவது தனியார் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றின் விருப்பத்தை நிறைவேற்றவே திமுக அரசு இந்த சட்டத் திருத்த முன்வரைவை கொண்டு வந்திருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். எதிர்ப்பு மட்டும் எழாமல் இருந்திருந்தால், இந்த சட்டத்தை செயல்படுத்தி உள்ள தனியார் கல்லூரிகள் அனைத்தையும் பல்கலைக்கழகங்களாக்கி கட்டணக் கொள்ளைகூடங்களாக திமுக அரசு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

திமுகவின் துரோகங்களை மன்னிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அவர்கள் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கடந்த கால தவறுகளை உணர்ந்து திமுக அரசையே திரும்பப் பெறுவார்கள். அதை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *