சங்கராபுரம், நவ.17:
சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 46). தொழிலாளியான இவருக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா(24), ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3 மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.
வசந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கமலக்கண்ணன் கூலி வேலை செய்து தனது குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்தார்.
இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சீறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கமலக்கண்ணன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
படிப்பை நிறுத்திய பிள்ளைகள்
இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. என்ஜினீயரிங் படித்து வந்த அவரது மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
அதேபோல் 8-–ம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினர். அபினேஷ் மட்டும் பூட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள், கிராம் மக்கள் கமலக்கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் அவர்களாலும் உதவி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது.
இதை அறிந்து அந்த குழந்தைகளின் மீது மனம் இரங்கிய கிராம மக்கள் கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங்களாகவே முன்வந்தனர். பின்னர் அவர்கள் வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()





