செய்திகள்

தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் வாங்க நடவடிக்கை

Makkal Kural Official

சென்னை, அக். 15–

பேரிடர் மீட்பு பணிகளுக்காக தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்களை வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் கனரக வாகனங்களை உள்ளூர் கொள்முதல் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு முன்வருமா எனவும் பஞ்சாபில் புயல் வந்த போது தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை தமிழகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:

நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடரில் பயன்படுத்த தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினரிடம் 9 கனரக வாகன வகைகள் பயன்பாட்டில் உள்ளது. பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம் மற்றும் கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. பேரிடரை எதிர்கொள்ள அனைத்து வகை ஆயத்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலத்திற்கு அதிகாரிகளை அனுப்பி தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வகையில் பேரிடர் மீட்பு வாகனங்களை வாங்க ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடருக்கு தனியாக நிதி உள்ளது. மத்திய அரசு நிதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் தேவையான நிதியை பெற்று பேரிடர் உபகரணங்களை கொள்முதல் செய்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *