சென்னை, அக். 7–
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம் மக்களுக்கும், நகை பிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக உலக நாடுகள் தங்களது மத்திய வங்கிகளில் தங்கக்கட்டிகளை வாங்கிக் குவித்ததன் விளைவாகவும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் தொடர் ஏற்றம் கண்டுள்ளது. சில சமயங்களில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது.
அக்டோபர் 3–ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.110-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து சவரன் ரூ.88,480-க்கும் விற்ற நிலையில், மீண்டும் மாலையில் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் கிராமுக்கு ரூ. 65-க்கும், சவரனுக்கு ரூ. 520ம் உயர்ந்து சவரன் ரூ. 89,000-க்கும் விற்பனையானது.
சவரனுக்கு ரூ.600 உயர்வு
இந்த நிலையில் சென்னையில் 22 கார்ட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.88,600-க்கு விற்பனை ஆகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதோடு ஐப்பசி மாதம் முகூர்த்த நாட்களி சுப விசேஷங்கள் நடைபெறும். அதனால் தங்கம் விலை மேலும் உயரும் என தெரிகிறது. ஜெட் வேகத்தில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், விரைவில் ஒரு சவரன் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ. 1 லட்சத்தை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் துவக்கத்தில் (ஜனவரி) சவரன் ரூ.60,000-க்கு விற்பனையான தங்கம், ஜூன் மாதத்தில் ரூ. 72,000-ஐயும், தற்போது கிட்டத்தட்ட ரூ. 90,000-ஐயும் நெருங்கியுள்ளது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ. 35,000 வரை ஒரு சவரன் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





