செய்திகள்

தங்கம் சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது: வெள்ளி விலை ரூ.206 ஆனது

Makkal Kural Official

சென்னை, அக்.14–

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனையாகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் கடந்த 7ம் தேதி ரூ. 90,000-யைக் கடந்தது. அடுத்த 3 நாள்களிலேயே ரூ.92,000யை எட்டியது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.92,640க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.245 உயர்ந்து ரூ.11,825-க்கு விற்பனையாகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ரூ.1,03,200க்கு விற்பனை ஆகிறது.

தொழில் துறையில் வெள்ளி தேவை அதிகரிப்பால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வெள்ளி விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதனால் மக்கள் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *