சென்னை, ஆக. 29–
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு சவரன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சவரனுக்கு ரூ.280-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் மேலும் உயர்ந்து வேகமெடுத்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் தங்கம் விலை உயரும்பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.131-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





