புதுடெல்லி, ஜன.20-–
டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் நேற்று டெல்லி வந்தார். அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது 3-வது முறை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இது 5-வது பயணம்.
டெல்லி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இது, அமீரக அதிபரின் பயணத்துக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தில், அமீரக அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டன. பின்னர், இரு தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்தனர். இருவரும் கைகளை பற்றிக்கொண்டு உரையாடினர்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், அமீரக அதிபரும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு, எண்ணெய் திட்டங்கள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
மத்திய கிழக்கு நிலவரம் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஈரான்–-அமெரிக்க உறவில் ஏற்பட்ட விரிசல், சவுதி அரேபியா-அமீரகம் இடையிலான பதற்றம், காசா நிலவரம் ஆகியவற்றால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்துக்கிடையே இந்த பயணம் அமைந்துள்ளது.
இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் 2032-ம் ஆண்டுக்குள் ஆண்டு வர்த்தகத்தில் ரூ.18 லட்சம் கோடிக்கு (200 பில்லியன் அமெரிக்க டாலர்) இலக்கை அடைய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பெரிய அணு உலைகள் மற்றும் சிறிய மட்டு அணு உலைகளின் மேம்பாட்டுக்கான அணுசக்தி தொழில்நுட்ப கூட்டாண்மையை ஆராயவும், அத்துடன் மேம்பட்ட உலை அமைப்புகள் மற்றும் அணுமின் நிலைய செயல்பாடுகளில் ஒத்துழைக்கவும் இரு தரப்பும் முடிவு செய்தன. ஆண்டுதோறும் 0.5 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வழங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு ஒரு முன்னுரிமை ஒத்துழைப்புப் பகுதியாக அடையாளம் காணப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாண்மையுடன் இந்தியாவில் ஒரு சூப்பர்கம்ப்யூட்டிங் கிளஸ்டரை அமைப்பதில் ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது.
மர ஊஞ்சல் பரிசு
விண்வெளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூட்டுப் பணிகளுக்காக மற்றொரு நோக்கக் கடிதமும் கையெழுத்தானது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு, இந்திய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த அலங்கார மர ஊஞ்சலையும், ஒரு பஷ்மினா சால்வையையும் பரிசாக வழங்கினார்.
![]()





