திம்பு, நவ. 11–
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.
திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:–
டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக தேசம் துணை நிற்கும்.
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களை தப்பிக்க விடமாட்டோம். இந்த சதித்திட்டத்தின் வேர் வரை சென்று, பின்னால் இருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெகா வாட் நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், ‘‘பூடான் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். பூடான் மன்னர் உடன் உறவை வலுப்படுத்துவது குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி நேரடியாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
![]()





