செய்திகள்

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 26–

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் வீரர்கள் புடைசூழ சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றார்.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு எம்ஐ–1வி ரக ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியைப் பறக்கவிட்டப்படி மலர்கள் தூவின. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய விண்வெளி வீரரான இஸ்ரோவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கான வீரதீர விருதான ‘அசோக சக்ரா’ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இதனை அவரது மனைவி டாக்டர் கம்னா சுக்லா பெருமிதத்துடன் கண்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் நடந்த முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் அணிவகுப்பில் இடம்பெற்றனர்.

இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளில்லா விமானங்கள்,

டிரோன்கள் அணிவகுப்பு

இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்தது. ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், அர்ஜுன் டாங்கி, டி19 பீஷ்மா ரகம் உள்ளிட்ட பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூா்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சர் அமைப்பு, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன. விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன. குடியரசு தினவிழாவில் 4 பைரவா மற்றும் சீக்கியர் படைப்பிரிவினர் கூட்டாக அணிவகுத்து சென்றனர்.

பின்னர் மத்திய அரசின் 13 துறைகள் மற்றும் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டு காளையுடன்

தமிழக அரசின் வாகனம்

தமிழக அரசின் வாகனத்தில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர். இதேபோல் அசாம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களின் வாகனங்களும் அணிவகுத்து சென்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *