புதுடெல்லி, டிச. 16:
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் இன்று அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த 8 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியது. அதிகாலை என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்ததால் எல்லா செய்வதென்று தெரியாது தவித்த பயணிகள் அலறிதுடித்தனர். பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
தீ விபத்து நேரிட்டதும் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் 4 பேர் தீ விபத்தில் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.மதுரா மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 25 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவுச் சாலையில் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மூடுபனி காரணமாக விபத்து நேரிட்டிருந்தாலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத:
மதுரா மாவட்டத்தில் யமுனா விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
![]()





