செய்திகள்

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா: மோடி பங்கேற்பு

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன.14–

டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என

நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னதபாரதம்’ என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரும்பு, வாழை தோரணம்

இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும்

தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

தமிழ் பொங்கல் வாழ்த்து

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தன்

உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும்

பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது. தமிழ் கலாசாரம் என்பது முழு தேசத்தின் ஒரு பொதுவான பாரம்பரியம்.

இயற்கையின் மீதான நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்குள் நின்றுவிடாமல், அது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாரம்பரியமான தமிழ் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.

வாழ்க தமிழ், வளர்க பாரதம்! வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. திருக்குறளை போற்றி பாடல் பாடப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பிரதமர் மிகவும் ரசித்து பார்த்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *