இடிபாடுகளில் 12 பேர் சிக்கித் தவிப்பு
புதுடெல்லி, ஜூலை 12–
டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று காலை 4 தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள 4 தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை 7 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் 12 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என்பதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளிலிருந்து ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மற்றவர்களின் நிலைமை என்ன என்பது பற்றிய தகவல்கள் இல்லை, அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை நேர நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தான் சம்பவம் குறித்த தகவலை தீயணைப்பு துறையினருக்கு முதலில் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
![]()





