வாஷிங்டன், ஜூலை 9–
அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு ”டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:– பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது டாலரை சீரழிக்கவும் அமைக்கப்பட்டது.
டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம். அதற்கு சவால் விட விரும்பினால், அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்களில் யாரும் அந்த விலை கொடுக்க தயாராக இருப்பதாக நான் நினைக்கவில்லை. டாலருக்கு சவால் விடும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
டாலருக்கென்று ஒரு தரமிருக்கிறது. அவர்கள் என்னிடம் விளையாட்டு காட்டுகிறார்கள். எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும்.
ஒரு வருடம் முன்பும் நான் சொன்னேன். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பிரிந்துவிட்டன. அதில், ஒன்று இரண்டு மட்டும் கூட்டாக சுற்றிக் கொண்டிருக்கின்றன
பிரிக்ஸ் ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்பது என் கருத்து. உங்களிடம் ஒரு புத்திசாலி அதிபர் இருந்தால், நீங்கள் ஒருபோதும் தரத்தை இழக்க மாட்டீர்கள். முந்தைய ஜனாதிபதியைப் போன்ற ஒரு முட்டாள் உங்களிடம் இருந்தால், நீங்கள் தரத்தை இழப்பீர்கள்.
உங்களிடம் இங்கே டாலர்கள் இருக்காது. உலகத் தரமான டாலரை நாம் இழந்தால், அது ஒரு உலகப் போரில் தோற்றது போன்றது. புதிய வரி விதிப்புகளின்படி, ஆகஸ்ட் 1ம் தேதி 2025ம் ஆண்டு முதல் வரிகள் வந்து குவியும். இந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசிலில் கடந்த வாரம் நடந்தது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் முதன்மை உறுப்பினர்களாக இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இணைந்துள்ளன. மொத்த உலகளாவிய உற்பத்தியில் 39 சதவிகிதத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் இணைந்து டாலருக்குப் போட்டியாக பிரிக்ஸ் கரன்சியை வெளியிடுவது பற்றி 2023ம் ஆண்டில் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





