செய்திகள் முழு தகவல்

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, டிச. 16:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை, திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 200 வார்டுகளுக்கும் தலா 3 வீதம் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மொத்தம் 600 எண்ணிக்கையிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகள் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

மேலும், ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சருடைய பாக்ஸ் கிரிக்கெட் இளையோர் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பேசியதாவது:–

இன்றைக்கு சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3,100 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கொடுக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஒவ்வொரு முதலமைச்சர் மினி ஸ்டேடியம். இந்த மினி ஸ்டேடியத்தில் குறைந்தது 5 விளையாட்டு வசதிகள், அதில் எல்லா ஸ்டேடியத்திலும் உடற்பயிற்சி கூடத்தோடு, கிட்டத்தட்ட இன்றைக்கு 70, 75 ஸ்டேடியங்களுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

மொபைல் போன் நேரத்தைக்

குறைத்துக் கொண்டு…

விளையாடுங்கள், விளையாட்டால் உடல் நலம், மனநலம் இரண்டுமே மேம்படும். எனவே, மொபைல் போன் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி, தொடர்ந்து களத்தில் பயிற்சி செய்து, உங்களுக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கின்றதோ அதை வெளிக்காட்டி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து, தமிழ்நாட்டிற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் நீங்கள் அத்தனைபேரும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த விளையாட்டு உபகரணங்களை தயவு செய்து பத்திரமாக பாதுகாக்கவும், பராமரிக்கவும், தொடர்ந்து உபயோகித்து, இதை முறையாக அதற்கான லெட்ஜரை பதிவு செய்து, அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் கூறினார்.

கே.என்.நேரு,

மா.சுப்பிரமணியன்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், த.வேலு, ஆர்.மூர்த்தி, அ.வெற்றி அழகன், பிரபாகர ராஜா, க.கணபதி, ஜோசப் சாமுவேல், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, துணைமேயர் மு.மகேஷ்குமார்,

மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கேரம் உலக சாம்பியன் கீர்த்தனா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற கூடைப்பந்து வீராங்கனை ஸ்ருதி ரத்தினவேல் உள்பட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *