சென்னை, நவ.28:
ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துக்கு மாணவ மாணவிகள் பயன் பெறும் விதத்தில் ஆங்கில உரையாடல் பயிற்சி – டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் உள்பட 4 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் கவலைப்படக்கூடாது; எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது. தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் 3–ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதலாவது அறிவிப்பு
நாட்டுப்புற கலையில், குறிப்பாக ‘பறையாட்டம்’ கலை வல்லுநரான வேலு ஆசான் என்கிற பத்மஸ்ரீ வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் மரபு கலைகளான கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில், கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
உங்கள் பல்கலைக்கழகத்தில், பல்வேறு இசை, நிகழ்த்து கலை மற்றும் கவின் கலைகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கவின்கலையில், புதியதாக கலை பாதுகாப்புப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு 2026-–2027-ஆம் கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முதுகலை பட்டப்படிப்பின் மூலமாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், அதிக வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக தற்போது வழங்கப்படும் 3 கோடி ரூபாய் மானியத் தொகையை 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நான்காவது அறிவிப்பு
“நான் முதல்வன்” திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக, மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி மற்றும் டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்.
இப்படி பல்வேறு வகைகளில் உங்களுக்கு ஆதரவாக இருந்து, உங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல திராவிட மாடல் அரசு எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!
ஏ.ஐ. மூலம் ஓவியம்,
பாடல்கள், இசை
அதேபோல், இப்போது ஏ.ஐ மூலமாக பலரும் ஓவியங்கள் – பாடல்கள் – இசை என்று உருவாக்குகிறார்கள். அதனால், நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது. எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது! தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
வித்தை தெரிந்தவர்களிடம் இருந்தால் தான் ஆயுதத்திற்கு மதிப்பு. அதனால், நீங்கள் தொடர்ந்து டெக்னாலஜியை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கலைஞானி கமல்ஹாசன் கூட சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை படித்துவிட்டு வந்திருக்கிறார். இந்த ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும். ஆன்லைனில் தேடினாலே நிறைய கோர்ஸ் கிடைக்கும். அதனால் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்!
இந்தியாவுக்கு
பெருமை தேடுங்கள்
உங்களின் அறிவை – திறமையை – உங்கள் கலைகளில் வெளிப்படுத்துங்கள்! கலைகள்தான், மொழியை – பண்பாட்டை – இனத்தைக் காக்கும். இப்போதெல்லாம், இளைஞர்கள் நிறைய ஃபோன் பார்க்கிறார்கள். சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்கள். உடல்நலனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதற்கெல்லாம் உங்கள் கலைகள் மூலமாக நீங்கள் நல்ல தீர்வை கொண்டு வர வேண்டும்.
தமிழுக்கும் – தமிழினத்திற்கும் பெருமை சேர்த்திடும் படைப்புகளை நீங்கள் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கலையால், கலைமாமணி போன்ற மாநில அரசின் விருதுகள் – ஒன்றிய அரசின் விருதுகள் – உலக அங்கீகாரங்கள் உங்களைத் தேடி வர வேண்டும். உங்களின் புகழால், தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கு நீங்கள் பெருமை தேடித் தர வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, முதன்மைச் செயலாளர் மணிவாசன், துணைவேந்தர் சௌமியா, பதிவாளர் பூமாலினி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துகுமார், நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு, வாரியத் தலைவர் பூச்சி முருகன், பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ராம்ராஜ், நாகராஜன் உள்ளிட்ட சான்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





