புதுடெல்லி, செப்.4-–
டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது.
அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.
40 சதவீத சிறப்பு வரி
அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளன.
அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்போல ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கை வினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.
மத்திய அரசின் இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரையை கடந்த மாதம் ஜி.எஸ்.டி. மாநில மந்திரிகள் குழு விவாதித்து ஏற்றுக்கொண்டது. அத்துடன் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் பரிந்துரைகளை அனுப்பியது.
அதைத்தொடர்ந்து இந்த சீர்திருத்தம் குறித்து முடிவு எடுப்பதற்காக, ஜி.எஸ்.டி. தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய இந்த 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிதி மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்த திட்டத்தை, அதாவது 4 அடுக்கு வரி விகிதம் 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றப்படுவதை வெளியிட்டார்.
இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதம் நடந்தது. 10½ மணி நேரத்துக்கு மேலாக நீண்ட இந்த விவாதம் இரவில் நிறைவடைந்தது.
இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், அதாவது 2 அடுக்காக குறைக்கப்படும் ஜி.எஸ்.டி.2.0 கவுன்சிலில் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
22–ந்தேதி முதல் அமுல்
இதை நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளைக் குறைத்துள்ளோம். இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். மேலும் இழப்பீட்டு வரி தொடர்பான பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
சாதாரண மக்களை மையமாக வைத்து இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான ஒவ்வொரு வரியும் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண மனிதர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டு பொருட்களில், முழுமையான குறைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிர் காக்கும் மருந்துகளுக்கு
வரி இல்லை
பின்னர் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-– மிக அதிக வெப்பநிலை பால், சென்னா மற்றும் பனீர். ரொட்டி, பரோட்டா அனைத்துக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே இவற்றின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி அனைத்தும் பூஜ்ஜியமாகிவிடும்.
பென்சில், அழிப்பான், வரைபடங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் 33 உயிர்காக்கும் மருந்து களுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.
இதைப்போல தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
வரி குறையும் பொருட்கள்
ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, சைக்கிள்கள், மேஜைப் பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
தையல் எந்திரம், நாப்கின், டயாபர், புஜ்ஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய் போன்றவை 12 சதவீதம் அல்லது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.
பாட்டில் குடிநீர் (20 லிட்டர்), பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், சைக்கிள், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், சைக்கிள், பாத்திரங்கள், சணல் மற்றும் பருத்தி கைப்பைகளும் விலை குறைகின்றன.
டிராக்டர்கள், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் எந்திரங்கள், அறுவடை அல்லது கதிரடிக்கும் எந்திரங்கள், வைக்கோல் அல்லது தீவன பேலர்கள், புல் அல்லது வைக்கோல் நகர்த்தும் எந்திரங்கள், உரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்ற விவசாயப் பொருட்கள் அனைத்தும் 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.
ஏ.சி., சிறிய கார்கள்
விலை குறைகிறது
ஏ.சி. எந்திரங்கள், 32 அங்குலத்திற்கு மேல் உள்ள டி.வி.க்கள், பாத்திரங்களை கழுவும் எந்திரங்கள், சிறிய கார்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்துக்கும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
12 உயிரி பூச்சிக்கொல்லிகள், இயற்கை மெந்தோல் ஆகியவற்றுக்கு 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் கைவினைப்பொருட்கள், மார்பிள், கிரானைட் பிளாக், நடுத்தர தோல் பொருட்களும் 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன. சிமெண்டுக்கு 28-ல் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
புற்றுநோய், அரியவகை நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 3 உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
இதைத்தவிர ஏராளமான மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகின்றன. மேலும் பார்வையை சரிசெய்யும் கண்ணாடிகள் மற்றும் கண் கண்ணாடிகளும் 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சி மாநிலங்கள் கோரிக்கை
முன்னதாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் டெல்லியில் கூடி விவாதித்தனர்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் ஒரே மனதாக ஏற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
![]()





