சென்னை: டிச. 18–
ஜால்ரா அடித்துதான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டி அவரது பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அண்ணாமலை கூறினார். காந்தியின் சிந்தனைகளையும் மதிப்புகளையும் அரசுத் திட்டங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மோடியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்கும் முன் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். குறிப்பாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க. அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் இதுகுறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு தார்மிக உரிமை இல்லை என்றும் விமர்சித்தார்.
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்த அண்ணாமலை உண்மையை வெளிப்படையாக பேசுவதால் சிலருக்கு சங்கடம் ஏற்படுகிறது. ஆனால், நான் யாருக்கும் ஜால்ரா அடித்து அரசியலில் இருக்க விரும்பவில்லை. எந்த சினிமா நடிகருக்கும் புகழ்பாடுவதற்காகவோ பதவிக்காகவோ நான் அரசியல் வந்தவன் அல்ல என்றார். மக்களுக்கான கொள்கை மற்றும் நாட்டின் நலனுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் உன்னதமான கோட்பாடுகளுக்காகவே தனது பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பதவி என்பது தற்காலிகமானது என்றும் சுயமரியாதையையும் கொள்கைகளையும் இழந்து பதவியில் இருப்பது தேவையற்றது என்றும் அண்ணாமலை கூறினார். ஜால்ரா அடித்துதான் பதவி கிடைக்கும் என்றால் அப்படியான பதவி எனக்கு வேண்டாம் எனத் தெளிவாகக் கூறி தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
![]()





