செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Makkal Kural Official

நாமக்கல், ஜன. 27:

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாமக்கல் சாலப்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

“ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு ஆகும். கலாச்சார அடையாள விளையாட்டும் கூட.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் எதிர்பாராதவிதமாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்து கொடுக்கப்படும். காளைகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ.இளங்கோவன், இளைஞர் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் அமைச்சர் வி.சரோஜா, நாமக்கல் நகரச் செயலாளர் கே.பிபி. பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *