செய்திகள்

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ஆப்பரேஷன் அகல்

Makkal Kural Official

ஸ்ரீநகர், ஆக. 9–

ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் 9 நாட்களாக தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் அகல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நேற்று நள்ளிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த ராஷ்டிரியா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டேபிள் ஹர்மிந்தர் சிங் மற்றும் லான்ஸ் நாயக் ப்ரீத்பால் சிங் ஆகியோர் பலியானதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில், இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜம்மு – காஷ்மீரின் அடர்ந்த வனப் பகுதியினுள், பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, ஜம்மு – காஷ்மீர் காவல் துறை ஆகிய படைகள் இணைந்து தீவர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவம் தரப்பில் ருத்ரா ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் துணை ராணுவப்படையும் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *