செய்திகள்

ஜப்பான், ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 அடி உயரத்துக்கு எழுந்த பேரலை

Makkal Kural Official

மாஸ்கோ, ஜூலை 30–

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சத்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுமார் 13 அடிக்கு சுனாமி பேரலைகள் கரையை தாக்கின. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்து உள்ளது.

இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது.

தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் செய்தி முகமை உறுதி செய்துள்ளது. மக்கள் அடைக்கலம் தேடி வீதிகளில் குவிந்ததாக டாஸ் தெரிவித்துள்ளது. அங்கு மின்சார வசதி மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்க தாக்கங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலநடுக்கம் பற்றிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், வீட்டின் உள்ளே இருந்த நாற்காலி, மேஜை போன்ற பொருட்கள் கிடுகிடுவென ஆடும் காட்சிகள் காணப்படுகின்றன. மேஜை மீது இருந்த பாட்டில், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களும், வாளியில் இருந்த தண்ணீரும் குலுங்கும் காட்சிகளும் உள்ளன.பல தசாப்தங்களில் இல்லாத வகையில், மிக கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது என கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலோடோவ் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். 73 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம்

கம்சத்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 73 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம் என்று ரஷ்ய அறிவியல் மையத்தினர் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1952ம் ஆண்டு இப்பகுதியில் ரிக்டர் அளவில் 9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இப்போது தான் இந்தளவு கடுமையான நிலநடுக்கம் வந்துள்ளது; தொடர்ந்து ஏற்படக்கூடிய சிறு அதிர்வுகள் அடுத்தடுத்து வரலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்கு சக்லைன் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு சுனாமி அலைகள் கடற்கரையோர கட்டங்களை மூழ்கடித்தன. துறைமுக நகரமான குரில்ஸ் நகரில் கடுமையான சுனாமி அலைகள் தாக்கியதில், படகுகள், சிறுகப்பல்கள் தூக்கி வீசப்பட்டன. அந்நகரில் வசிக்கும் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

9 லட்சம் பேர் வெளியேற்றம் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுனாமி எச்சரிக்கைக்கு தொடர்ந்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரை 133 நகராட்சிகளில் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இஷினோமாகியில் 1.6 அடி அளவுக்கு அலைகள் மேலெழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனாவிலும் எச்சரிக்கை

பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யா, ஜப்பானை தொடர்ந்து சீனா, அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் ஹவாயில் வசிக்கும் மக்கள் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. 10 முதல் 13 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்றும் தெரிவித்துள்ளதால், கரையோரம் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுனாமி தாக்கும் என அஞ்சி ஹவாய் தீவின் ஹூனாலுலு நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் கார்களில் வெளியேறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாவிலும் முக்கிய கடற்கரை நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *