டோக்கியோ, ஆக. 29–
‘‘உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்’’ என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மோடி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:–
“டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பிறருடன் ஆலோசிக்கவுள்ளேன். இதன்மூலம் ஏற்கனவே உள்ள கூட்டாண்மை வலுப்படுத்தவும் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து டோக்கியோவில் இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:–
‘‘இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது. இந்தியா விரைவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்.
ராணுவம் – விண்வெளி
துறையில் பங்களிப்பு
ஏற்கனவே, இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, ரோபோடிக்ஸ், செமிகண்டக்டர், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி துறைகளில் வெற்றிகரமான ஆட்டோமொபைல் கூட்டாளிகளாக செயல்பட்டு வெற்றிநடை போடுகின்றன.
ராணுவம், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொருளாதாரம், அரசியலில் நிலைத்தன்மை நிலவுகிறது. இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது
ஜப்பான் நாட்டின் வணிகத்திற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது. ஏஐ, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும். மெட்ரோ ரெயில் உற்பத்தி, ஸ்டார்ட்அப் என ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வர்த்தக ஒப்பந்தம் : மறு ஆய்வு
ஜப்பான் பயணத்தின்போது பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா–ஜப்பான் இடையே உள்ள ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் இஷிபாவும் மறு ஆய்வு செய்ய உள்ளனர்.
ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆகஸ்ட் 31–செப்டம்பர் 1–ந்தேதி) பயணமாக சீனா செல்ல உள்ளார். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே சீனா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
![]()





