சென்னை, ஜன. 27–
நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா, “மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் விசாரணையை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்காக தாக்கல் செய்தது.
15–ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், “இதுதொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளதால், நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
சமூகத்தில் பிரச்சனை
உருவாக்கும் காட்சிகள்…
பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், ”ஜன நாயகன் படத்தில் மத மோதல்கள் போன்ற காட்சிகள் இருப்பதாலும், அனுமதி பெறாமல் பாதுகாப்புத் துறையின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்” என்று வாதிடப்பட்டது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தனர். ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாயின் உத்தரவை ரத்து செய்துள்ளனர். உரிய விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரியத் தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு பி.டி.ஆஷாவிடம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் பட வெளியீடு மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
![]()





