செய்திகள்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி ஆரம்பம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 10:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கால அட்டவணையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி செய்துள்ளது.

அதன்படி வருகிற 28-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

மறுநாள் அதாவது 29-ந் தேதி குடியரசு தினவிழாவில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் தினம் என்பதால் அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாது.

பின்னர் 30-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. 31-ந்தேதி இரு அவைகளும் நடைபெறாது.

மத்திய பட்ஜெட் முந்தைய காலங்களில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் பிப்ரவரி 1-ந்தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. எனவே அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என தெரியவில்லை.

எனினும் வழக்கம் போல பிப்ரவரி 1-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெறும் முதல்கட்ட கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

பின்னர் சுமார் ஒரு மாத காலம் இடைவெளிக்குப்பின் மார்ச் 9-ந்தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த 2-ம் கட்ட அமர்வில் பல்வேறு துறைகளுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை களிலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும். ஆனால் ஏப்ரல் 3-ந்தேதி புனித வெள்ளி என்பதால் அதற்கு முன்தினமே பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அட்டவணையை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று மாலையில் உறுதி செய்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டுவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார்.

அதன்படி ஜனவரி 28-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை பட்ஜெட் தொடர் நடக்கிறது.

இதில் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13-ந்தேதி நிறைவடைகிறது. அர்த்தமுள்ள விவாதம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது.

இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

எனினும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து கிரண் ரிஜிஜு எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *