செய்திகள்

ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி-–பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை

Makkal Kural Official

சென்னை, நவ.3-–

வேளச்சேரி–-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடற்கரை–-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம்-–பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கோர்ட்டில் வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன. இதற்கிடையே 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்தது. எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வேளச்சேரி–-பரங்கிமலை வழித்தடத்தில் தண்டவாளம் பணி மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இறுதிகட்டமாக, பரங்கிமலை பறக்கும் ரெயில் நிலையத்தில் தண்டவாள மற்றும் மின்மயமாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைய உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-– வேளச்சேரி–-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் ரெயில்வே துறை சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும். பரங்கிமலை பறக்கும் ரெயில் நிலையத்தில் எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *