செய்திகள்

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இல்லை – காரணம் என்ன? தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்

Makkal Kural Official

சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், “தணிக்கை குழு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படுவதால் தயாரிப்பாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். தற்போது பான் இந்தியா படங்களை அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் சென்சார் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் அமலுக்கு வரும் போது ஆரம்ப கட்டத்தில் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை” என்று தெரிவித்தனர்.

பட வெளியீட்டுக்கு முன்பாகவே தியேட்டர் முன்பதிவு தொடங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் புக்கிங் செய்ய முடியாது என்றும் அவர்கள் கூறினர். வெளிநாடுகளில் படம் வெளியிட வேண்டுமானால், குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்பே சென்சார் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் விளக்கினர். “ஒரு படத்தில் இடம்பெறும் காட்சிகள் சமூகத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஏதேனும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருந்தால், படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நூறு சதவீத பாதிப்பு ஏற்படுகிறது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

‘ஜனநாயகன்’ படத்தைப் பொருத்தவரை, தணிக்கை குழு குறிப்பிட்ட சில காட்சிகள் திருத்தப்பட்ட பிறகும் ஏன் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறித்து தெளிவான காரணம் கூற முடியாது என்றும், ஆனால் இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பது உண்மை என்றும் சங்கம் கூறியது. தனிப்பட்ட ஒரு படத்தின் விவகாரத்தில் தலையிட முடியாது என்றும், சினிமா துறையை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே சங்கம் குரல் கொடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்ததை கேட்டு, “ஒரே குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவர், தனது கருத்து ஏற்கப்படவில்லை என்பதற்காக புகார் அளிப்பது வினோதமாக உள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் நிபுணர் ஆலோசனை தேவைப்படுவதாகவும், மறுஆய்வுக்கு அனுப்புவதற்கு தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இதில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *