செய்திகள்

சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

Makkal Kural Official

விழுப்புரம், டிச.15:

திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த சிற்பம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பா.சரத்குமார் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அங்கு கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர், நந்தி மற்றும் சப்தமாதர் குழுவை சேர்ந்த சில சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள அரச மரத்தடியில் சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் நடராஜர் சிற்பம் அழகிய கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நடராஜர் சிற்பம் செப்பு திருமேனிகளில்தான் அதிகமாக காணப்படும். ஆனால் இங்கு பலகை கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிற்பம் மிகவும் அரிதாகும். இப்பகுதியில் இருந்த பழமையான சிவன் கோவில் இந்த நடராஜர் மூலவராக வைத்து வழிபட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் நடராஜர் சிற்பத்துக்கு எதிரே சில அடி தூரத்தில் மிகப்பெரிய திமிலுடன் கூடிய நந்தி சிற்பம் காணப்படுகிறது. இதன் கழுத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணிகள் சோழர் கால சிற்ப கலைக்கு சான்றாக விளங்குகின்றன. இதே பகுதியில் சப்தமாதர் குழுவை சேர்ந்த 4 சிற்பங்களும் உள்ளன.

இந்த நடராஜர் சிற்பம் சோழர் காலத்தை சேர்ந்த சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது ஆகும் என்று மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். கள ஆய்வின்போது ஏமப்பேரூர் பிரகதீஸ்வரன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *