சேலம், ஆக. 28–
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க ராஜமுருகன் முயன்றிருக்கிறார். ஆனால் இதற்கு முன்னர் பாம்புகளை பிடித்து அனுபவமில்லாத அவர், விளையாட்டுதனமாக பாம்பை பிடித்திருக்கிறார். சிறிய பாம்பு என்பதால் விஷம் குறைவாக இருக்கும் என்று நினைத்து பிடித்திருக்கிறார்.
ஆனால் பிடித்த உடனேயே அவரின் கட்டை விரலை பாம்பு கடித்திருக்கிறது. இருப்பினும், சினிமாக்களில் வருவதை போல கையில் துணியை கட்டிக்கொண்டு பாம்பை மீண்டும் பிடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து வேறுவழியின்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் சுய நினைவை இழந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பாம்பை பிடிக்க முற்படும்போது பாம்பு கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![]()





