* ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியீடு * ராமதாஸ் வேடத்தில் ஆரி அர்ஜுனன்
சென்னை, ஜூலை 25–
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
இப்படத்திற்கு ‘‘அய்யா’’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சேரன் இயக்க உள்ளார். (பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.)
தமிழ்க் குமரன் புரடக்ஷன்ஸ் சார்பாக ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிக்கிறார். இப்படத்தில் ராமதாசின் இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. விரைவில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 3 பாகங்களாக உருவாகலாம் என தெரிகிறது.
முதலில் இந்த படத்தில் ராமதாஸ் ஆக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் முகம், வயது காரணமாகவும், அந்த திட்டம் ரத்தானது. இப்போது ஆரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
“ராமதாசின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘அய்யா’வில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பிற்காக இயக்குனர் சேரன் சார், மற்றும் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனுக்கு நன்றி. படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குரலற்றவர்களுக்காக அவரது குரல் கர்ஜித்தது. இப்போது, அவரது கதையில் பெரிய திரையில் கர்ஜிக்க உள்ளது” என்று ஆரி அர்ஜுனன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமதாஸ் பிறந்த நாளில் அவரது ‘‘பயோபிக்’’ (வாழ்க்கை வரலாறு) படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படம் தொடர்பாக 4 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.1987ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக பதவி வகித்த போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. அதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த 1987 போராட்டத்தைக் குறிக்கும் வகையிலேயே அந்த நான்கு போஸ்டர்களும் வெளியாகியுள்ளதால் கதையும் அந்த போராட்டத்தை மையமாக வைத்தே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள சேரன், “இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு” எனக் கூறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில் தமிழ்நாட்டின் சிங்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை சினிமா படமாக தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஜெயலலிதா உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
![]()





