கதைகள் சிறுகதை

செய்த பிழக்கு- மு.வெ. சம்பத்

Makkal Kural Official

தண்டபாணி, தரணி, பாலன் மூவரும் சகோதரர்கள். தண்டபாணி குடும்பக் கணக்கு வரவு, செலவு, நில புலங்களை கவனித்து வந்தார். பண வசதியைப் பெருக்கி வைத்தார். ஒரே வீட்டில் இருந்த மூவரில் இருவர் தனித்தனியே பங்களா மாதிரி வீடு கட்டிக்கொண்டு சென்றார்கள். தண்டபாணி பழைய வீட்டில் தங்கினார்.

தண்டபாணிக்கு ஒரே மகன். காலம் கடந்து பிறந்தவர் அவர். பெயர் சுகந்தன். நன்கு படித்த சுகந்தன் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று தண்டபாணி நோய்வாய்பட்டு இறந்தார். மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டில் சுகந்தனுக்கு சோதனை ஏற்பட்டது.

தரணி, இது தான் சரியான தருணமென நினைத்து செய்த காரியம் தண்டபாணி மனைவியை மிகவும் பாதித்தது. எல்லா சொத்தையும் இழக்கபோகிறோம் என்ற நினைப்பு வந்த அவர் மனஅழுத்தத்தால் வாடி, பையனிடம் கூறாமல் அவரும் இறந்தார். எல்லா காரியமும் முடிந்ததும், தரணி, ‘‘சுகந்தனிடம் நீ எங்காவது தங்கிக்கொள்’’ என்று கோபமான தொனியில் கூறினார். மேற்கொண்டு ஏதும் கேட்க மனமில்லாமல் சித்தப்பா செய்த காரியம் அனைத்தும் அறிந்து மௌனமானார் சுகந்தன்.

இறுதியாண்டு பணம் கட்ட வேண்டிய சூழல் சுகந்தனுக்கு. திக்கு தெரியாத காட்டில் உள்ளது போன்று உணர்ந்தார் சுகந்தன். கல்லூரி நிர்வாகம் பணம் கட்ட நெருக்கடி செய்த போது, யாரிடம் கேட்பது என்று அறியாத நிலை, ஏனெனில் அப்பாவிடம் பழகிய எவரும் பாரா முகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் சித்தப்பா பக்கம் சென்று விட்டார்கள். எந்த ஒரு பங்கும் இல்லாமல் செய்து விட்டாரே சித்தப்பா. கேட்டால் அப்பா கையொப்பம் இட்ட பேப்பர்களை காண்பிக்கிறார்.

சில தோழர்கள் உதவ முன் வர, சுகந்தன் ‘‘என்னால் உங்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியாது’’ என்று கூறி வாங்க மறுத்தார். கல்லூரி மைதானத்தில் அமர்ந்து வெட்ட வெளியை பார்த்து கண்ணீர் மல்க, செய்வதொன்றும் அறியாமல் சிலை போல் இருந்தார். அப்போது வந்த ஒருவர், உங்களை பேராசிரியர் கோபால் அழைத்து வர சொன்னார்’’ என்று கூற, தாய் பின் கன்று செல்வது போன்று சுகந்தன் சென்றார்.

சுகந்தனை பேராசிரியர் அமரும்படிக் கூறினார். ‘‘உங்களது நிலைமை முற்றிலும் அறிவேன் நான்’’ என்று கூறி விட்டு, உங்களது கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம், நீங்கள் படிப்பு முடியும் வரை கட்டியாச்சு என்றார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்ற வாசகம் மனதில் ஓட சுகந்தன் பேராசிரியரை தெய்வமாக வணங்கினார் .

‘‘நீங்கள் உங்கள் படிப்பு முடிந்ததும் இங்குள்ள மருத்துவ மனையில் பணி புரிய சம்மதமா?’’ என்று கேட்டார். உங்களுக்கு இங்கு தங்கும் இடம், உணவு, சம்பளம் உண்டு என்றார். சுகந்தன் சற்றும் யோசிக்காமல் படிப்பு முடிந்ததும் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்றார். பேராசிரியருக்கு நல்ல திறமையான மருத்துவரை இழக்க மனமில்லை. சுகந்தன் எங்கு சென்றாலும் பிரகாசிப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டதன் விளைவாகவே அவரை இங்கே சேர்த்தார்.

சுகந்தனிடம், ‘‘உனது கனவு என்ன என்பதை நான் அறிவேன். நிச்சயம் அது நிறைவேறும்’’ என்றதும் சுகந்தன் அவர் காலில் விழுந்து அவர் பாதத்தை கண்ணீரால் நிரப்பினார்.

படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த சுகந்தனிடம் கோபால் யாராவது சொந்தங்கள் வந்தார்களா என்றதற்கு இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினார் சுகந்தன். என்னைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை என்று கூறிய வேளையில், ‘‘கோபால் இனிமேல் நீ எங்கள் வீட்டு உறுப்பினர்’’ என்றார். சுகந்தன் தனது இடைவிடாத உழைப்பு, கவனம் சிதறாமல் செய்த பணிகள், புன்முறுவலுடன் அணுகிய முறை அவரை சற்று முன்னுக்கு தள்ளியது. சுற்று வட்டாரங்களில் இவர் ‘‘நல்ல கைராசி மருத்துவர்’’ என்று பெயர் உலாவியது. கோபால் மருத்துவமனைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கினார். சுகந்தனின் வேண்டுகோளின்படி கிராமத்து மக்களுக்கு குறைவான கட்டணமே வாங்கப்பட்டது.

ரோபோக்கள் மூலம் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளலாமே என்று கோபால் சொல்ல,முதலில் இருதய பிரிவுக்கு முயற்சி செய்யலாம் என்றார் சுகந்தன். ரோபோக்கள் வாங்கப்பட்டு நல்ல முறையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடப்பதால், மருத்துவமனைக்கு சுற்றிலும் உள்ள மக்கள் வர ஆரம்பித்தனர்.

வங்கியில் வாங்கிய கடன் தொகை சீக்கிரமே அடைபட்டது கண்டு கோபால் ஆனந்தம் அடைந்தார். அன்று இரவு சாப்பாடு முடிந்ததும் கோபால் சுகந்தனிடம் ‘உங்கள் ஊரில் ஒரு கிளை திறக்கலாம்’ என்று கேட்க, சுகந்தன் நான் அங்கு சென்றால் ஊர் மக்களை வைத்தியம் பார்க்க எங்கள் சித்தப்பா அனுமதிக்க மாட்டார் என்றார். கோபால் கடினமான சிகிச்சைக்கு மட்டும் நீ வா, மற்றபடி நீ அங்கு வர வேண்டாம் என்றதும், சுகந்தன் ஒப்புக்கொண்டார்.

இதற்கு நடுவில் சுகந்தன் பல வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு மருத்துவம் சம்பந்தமாக கட்டுரைகள் அனுப்பியதில், சில கட்டுரைகள் மிகவும் ஆக்கபூர்வமாக உள்ளதாக பாராட்டி கௌரவம் மற்றும் பாராட்டு நிகழ்வு ஒன்று ஏற்பாடாகி அழைப்பிதழ் வந்தது. கோபால் ஆனந்தமடைந்து அனுப்பி வைத்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய சுகந்தன் நிறைய கை தட்டல் வாங்கினார். பாராட்டுக்கள் பெற்றார். சான்றிதழ், மெடல் இவற்றுடன் நல்ல பண வெகுமதியும் கிடைக்கப் பெற்ற சுகந்தன் ஊருக்கு வந்ததும் கோபால் வசம் எல்லாவற்றையும் தந்தார்.

பண வெகுமதியை மருத்துமனைக்கு தந்தார் சுகந்தன். கோபால் பணத்தை மறுத்தார். இருந்தாலும் சுகந்தனின் பிடிவாதத்தால் கோபால் பெற்றுக்கொண்டார். ‘‘இந்தப் பணம் முழுவதும் உங்கள் கிராமத்து மருத்துவமனைக்கு உபயோகப்படுத்தப்படும்’’ என்றார்.

அன்று காலை 6 மணிக்கு சுகந்தன் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, பார்த்தால் அது கோபாலிடம் இருந்து வந்திருந்தது. பதறிய சுகந்தன் ‘‘சார், வணக்கம்’’ எனக் கூற, கோபால் உடனே புறப்பட்டு வா, அவசரம் என்றார். சரி என்று சொல்லி உடனே தன்னை தயார்படுத்திக் கொண்டு சுகந்தன் கிளம்பினார்.

மருத்துவமனை பின் வாசல் வழியாக சென்ற அவரை கோபால் அழைத்துக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கே பார்த்தால் ஆபத்தான நிலையில் தரணி படுத்திருந்தார். கோபால், சுகந்தன் களத்தில் இறங்கி சிகிச்சை ஆரம்பித்து சுமார் 4 மணி நேரம் கடந்து தரணி அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். அடுத்து இரண்டு நாட்களில் அவர் இயல்புக்குவர சாந்தன் வேண்டுகோளின்படி கோபால் அவர்களே மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்தார்.

தரணி பூரண குணம் அடைந்த பின் , அவர் நன்றி சொல்ல, கோபால் ‘‘மருத்துவர் என்னுடன் சுகந்தன் சேர்ந்ததனால் தான் உங்களை காப்பாற்ற முடிந்தது’’ என்றார். என்ன தண்டபாணி பையனா என்றார் தரணி .தயவு செய்து யாரிடமும் எனக்கு வைத்தியம் பார்த்தது சுகந்தன் என சொல்லி விடாதீர்கள் என்றார் தரணி.

கோபால், ‘நிச்சயமாக சொல்ல மாட்டோம்’ எனக் கூறி விட்டு நாளை நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார். தரணிக்கு மிகவும் மன நிம்மதி ஏற்பட்டதோடு அல்லாமல், தண்டபாணி குடும்பம் மீண்டும் தழைத்ததே என்று மனதில் பொறுமினார்.

வீட்டிற்கு வந்த தரணிக்கு சுகந்தன் நினைவே அடிக்கடி வந்து சென்றது. யாரிடமும் கூற முடியாமல் தவித்தார். நாம் செய்தது தப்போ என நினைத்தார் .நமது மகன் இப்படி படித்து சோபிக்கவேயில்லயே என்று ஆதங்கப்பட்டார். நல்ல பையனை தவிக்க விட்டதோடு மட்டுமல்லாமல் அண்ணன் மனைவி இறப்புக்கும் காரணமாக ஆகி விட்டோமோ என நினைத்தார்.

தனது பணிகளை கவனிக்க தொடங்கிய தரணி நனறாகவே இருப்பதாக உணர்ந்தார். நடுநடுவில் அந்த நாட்கள் நினைவு வந்து போனது. ஒரு நாள் தரணி மகன் அப்பாவிடம், அந்த சுகந்தன் எந்த தெருவில் பிச்சை எடுக்கிறானோ… என்றார். உடனே தரணி பேசாதே, அவர் நல்ல நிலையில் இருந்தால் நல்லது தானே என்றதும், அவர் மகன் கையில் காசில்லாமல் எப்படி அவன் முன்னேறுவான் என்றார். தரணி ஏதும் தொடராமல் நிறுத்து பேச்சை என்றார் கோபத்துடன்.

அடுத்த சில நாட்களில் தரணிக்கு இலேசாக அயர்வு ஏற்பட, தரணி கோபால் மருத்துவரை தொடர்பு கொண்டார். மருத்துவர் நாளை எங்கள் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூற, சுற்றும் முற்றும் பார்த்த தரணி சுகந்தன் வர வேண்டாம் என்றார். சரி என்று கூறி கோபால் இணைப்பை துண்டித்தார்.

சுகந்தன் அன்று விரட்டியடித்த மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்த தரணி வீடு வந்தார். அவனை வாசலில் கண்ட தரணி மகன் ‘‘ஏன்டா நாயே எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு வந்தாய். பிச்சை யாருக்கும் வேண்டுமானாலும் போடுவேன், உனக்கு கிடையாது’’ என்று இன்னும் சில சொற்களால் வசை பாடினார். சுற்றி நின்று எல்லோரும் வேடிக்கை பார்க்க, சுகந்தன் உடனே கிளம்பினார். உள்ளே சென்ற மருத்துவர்கள் போட்ட ஊசியில் தரணி சற்று இயல்பான நிலைக்கு வந்தார். அவரிடம் வாசலில் நடந்ததைக் கூற, மகனை அழைத்து பக்கத்தில் அமரும்படி கூறினார்.

இனிமேல் மறைத்து பிரயோசனமில்லை என்று நினைத்து தரணி மகனிடம் இவர்கள் யாரிடம் இருக்கிறர்கள் என்று தெரியுமா, எனக்கு மருத்துவம் பண்ணினது யார் தெரியுமா என்றார். மகன் அடுத்து பேசுவதற்குள் தரணி, ‘‘நீ விரட்டி அடித்தாயே அந்த சுகந்தன் மருத்துவர் தான். இன்று பிரபலமாக பேசப்படும் மருத்துவர் அவர் தான். நான் செய்த பிழக்கு, என் அண்ணணின் கையெழுத்தை போட்டு கடன் பத்திரம் தயார் செய்து சொத்தின் மேல் உள்ள ஆசையில் எல்லாவற்றையும் அபகரித்தேன்’’ என்றார்.

உடனே மகன் அவரை ஒரு மாதிரியாக பார்த்தார். பின் ‘‘நடந்ததை யாரிடமும் கூறாதே…’’ என்றார். தரணி மகனிடம் நீ நம் ஆட்களுடன் சென்று சுகந்தனை அழைத்து வா என்றதும், மகன் போப்பா வேற வேலை இல்லை , மறுபடியும் சொத்துக்களை திருப்பி தரவா என்றார்.

பின் தரணி மகன் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க, அவர்கள் சுகந்தன் சார் இப்போது தான் சென்றார் வெளிநாட்டு பயணத்திற்கு. வர முப்பது நாட்கள் ஆகும் என்றார். வந்து சொன்ன தரணி மகன், எவ்வளவு பெரிய மருத்துவமனை என்றார். அப்போது தரணி சில பத்திரங்களை தந்து உனக்கு தான் இவைகள் என்றார்.

சுகந்தன் வந்ததை அறிந்த தரணி மருத்துவமனைக்கு சென்று கோபால் மருத்துவரிடம் நான் சுகந்தனை பார்க்க வேண்டும் என்றார். வந்த சுகந்தனை கண்ட தரணி, மெய் சிலிர்த்து , அவரிடம் தான் செய்த பிழக்கு பற்றி கூறி விட்டு, ‘‘இதற்கு மன்னிப்பே கிடையாது’’ என்று கூறி தண்டபாணியின் வீட்டு பத்திரத்தை தந்து இங்கு மருத்துவமனை தொடங்கி ஆசையை நிறைவேற்றிக்கொள் என்றார். சுகந்தன் அந்த பத்திரத்தை கோபால் வசம் தந்தார். ‘‘இனி எல்லாமே சுகமே…’’ என்றார் கோபால். பிழக்கு பிசு பிசுத்ததாக உணர்ந்தார் தரணி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *