புதுடெல்லி, ஆக. 1–
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அவரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21–ந்தேதியும், திரும்பப் பெற கடைசி நாள் 25–ந்தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் செப்டம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் நடைமுறைகளை தொடங்கிய தேர்தல் ஆணையம், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
![]()





