செய்திகள்

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழா

Makkal Kural Official

சென்னை, டிச. 30:

சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் கல்வி குழும தலைவர் ஐசரி கே கணேஷ் கலந்துகொண்டனர்.

சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27-ந் தேதி இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் எஸ்.மகேந்திர தேவ் தொடங்கி வைத்தார். ‘இந்திய பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு யதார்த்தங்களையும், உலக மாற்றங்களையும் எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் 3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதேபோல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 140-க்கும் மேற்பட்ட பிரபல பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் கல்வி குழும தலைவர் ஐசரி கே கணேஷ், துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், இந்திய பொருளாதார சங்கத் தலைவர் ஏ.டி.என்.பாஜ்பாய், பொதுச்செயலாளர் கே.ரவீந்திர பிரமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:–-

முத்ரா திட்டம் மூலம் 52 லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.25 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. 2021–-ம் ஆண்டில் இருந்து இந்தியா உலகின் அதிவேக வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இருக்கிறது. விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். மேலும், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். மூத்தவர்கள் சுமையல்ல. நாட்டின் மதிப்புமிக்க சொத்துகள். பிரதமர் மோடியின் பொருளாதார மாதிரி சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் பயன் தருவதாக இருக்கிறது. குறு, சிறு நிறுவனங்களின் பங்களிப்பும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானது. எனவே, அவற்றின் பங்களிப்பை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐசரி கே. கணேசுக்கு

கவுடில்யா விருது

தொடர்ந்து பேசிய வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், ‘கல்வி ஒருவரின் பொருளாதார நிலையை உயர்த்தும் முக்கிய கருவி என்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசுகள் சிறந்த கொள்கைகளை வகுக்க வேண்டும்’ என கூறினார்.

விழாவில், இந்திய பொருளாதார சங்கத்தின் 4-வது கவுடில்யா விருது வேல்ஸ் கல்வி குழும தலைவர் ஐசரி கே. கணேசுக்கு வழங்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்திய பொருளாதார சங்க மாநாட்டிலிருந்து ‘ஐசரி கே கணேஷ் எண்டோவ்மெண்ட் சொற்பொழிவு’ தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *