செய்திகள்

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்துசென்னையில் 17–ந் தேதி அண்ணா தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

சென்னை, நவ.15–

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்து சென்னையில் அண்ணா தி.மு.க. 9 மாவட்ட செயலாளர்கள் வரும் 17–ந் தேதி (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அண்ணா திமுக சார்பில் இதற்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 4–ந் தேதி தொடங்கி படிப்படியாக வீடு வீடாக சென்று பணியாளர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக போதிய அளவு முகவரியை கண்டுபிடித்து விண்ணப்ப படிவங்களை வழங்க முடியவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை வழங்கியதாக தங்களது கணினியில் பிஎல்ஓக்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை கண்டித்து அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சனைகளை எழுப்பி உள்ளனர்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் இல்லாத வகையில் செனனையில் அதிக அளவில் தவறுகள், குளறுபடிகள் நடப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

அரசியல் கட்சி முகவர்கள் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து முகவரி மாறிய வாக்காளர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. பி.எல்.ஓ.க்கள் வீடு வீடாக செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த பணியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா திமுக தலைமையிடம் புகார் செய்துள்ளனர். இதை அடுத்து அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளரின் நடவடிக்கை கண்டித்து 17ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நா.பாலகங்கா, ஆதி ராஜாராம், விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ். ராஜேஷ், எம்.கே.அசோக், கே.பி.கந்தன், புரசை வி.எஸ். பாபு உட்பட 9 மாவட்டத்தில் உள்ள அண்ணா திமுகவினர் திரளாக கலந்து கொள்கின்றனர். திமுக கட்சியினர் கூறுகின்றபடி பிஎல்ஓக்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *