செய்திகள்

சென்னை புழல் பகுதியில் 2 வயது ஆண் குழந்தை விற்க முயற்சி:

Makkal Kural Official

சென்னை, ஜூலை 26–

2 வயது ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, புழல் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் இ சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் புழல், கதிர்வேடு பகுதியைச்சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமாகியுள்ளார். தீபாவிடம், அவரது தோழியான வித்யா (எ) வித்யாராணி என்பவர் குழந்தைகள் தன்னிடம் இருப்பதாகவும், குழந்தையை பணம் கொடுத்து வாங்க யாராவது இருந்தால் அவர்களிடம் குழந்தையை விற்று தருமாறு கூறியுள்ளார்.

இது குறித்து தீபா, கார்த்திக்கிடம் தெரிவித்ததின்பேரில், கார்த்திக் மேற்படி வித்யா (எ) வித்யாராணியை தொடர்பு கொண்ட போது, ஆண் குழந்தையின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி ரூ.12 லட்சம் கேட்டுள்ளார். உடனே இது குறித்து கார்த்திக் புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்தபோது, 3 பெண்களும் சேர்ந்து, 2 வயது ஆண் குழந்தையை பணத்திற்காக சட்ட விரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் குழந்தையின் தாய் ரதிதேவி (40), வித்யா (எ) வித்யா ராணி, தீபா ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்டது. மேலும் 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் வித்யா (எ) வித்யாராணிக்கு அவரது தோழிகள் இது போன்று குழந்தைகளை கைமாற்றி கொடுத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்ததாகவும், அதன்படி வித்யா (எ) வித்யாராணி, மேற்படி ரவிதேவியின் குழந்தையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள எதிரிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஆண் குழந்தை குழந்தைகள் நல குழும அலுவலரிடம் ஒப்படைத்து குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *