செய்திகள்

சென்னை புத்தக காட்சியில் விருதுகள்: உதயநிதி வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜன. 20–

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49–வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில் சிறந்த சிறுவர் அறிவியல் நூல், கவிதை இலக்கியம், தன்னம்பிக்கை நூல், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், தமிழறிஞர், எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருதினை ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருதினை சிவகுரு பதிப்பகத்திற்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருதினை எழுத்தாளர் மு. முருகேஷ்க்கும்,

சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருதினை கடற்கரய் மத்தவிலாச அங்கதத்துக்கும், சிறந்த எழுத்தாளருக்கான பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருதினை ஜா.தீபாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருதினை அ.லோகமா தேவிக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருதினை செ.பா.சிவராசனுக்கும், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருதினை முனைவர் சுந்தர ஆவுடையப்பனுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பேசியதாவது:–

திராவிட மாடல் அரசு இன்றைக்கு வாசிப்பை ஊக்குவிக்கின்ற ஒரு அரசாகவும் தொடர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இதே மாதிரி புத்தகக் காட்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்த சென்னை புத்தகக் காட்சியை நடத்துவதற்கு நம் அரசு 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றது.

தி.மு.க. இளைஞரணியின் சார்பாக முதலமைச்சர் எங்களுக்கு கொடுத்த பணி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்றங்களிலும் ஒரு நூலகத்தை நீங்கள் அமைக்க வேண்டும் என்று சொன்னார். இன்றைக்கு கிட்டத்தட்ட 120 நூலகங்களை தி.மு.க இளைஞரணி தனியாக நடத்தி வருகின்றது. அதுமட்டுமல்ல, என்னுடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு நடமாடும் நூலகத்தையும் அமைத்திருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன், துணைத் தலைவர்கள் நக்கீரன் கோபால், வே.புருஷோத்தமன், பொருளாளர் அரு.வெங்கடாசலம், சங்க நிர்வாகிகள் மனுஷ்யபுத்திரன், இமையம், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *