சென்னை, ஜன. 20–
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிச்சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 11–ம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து, அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான சிற்றுண்டி பயிர் வகையினை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:–
சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறையின் சார்பில், மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, காலணிகள், 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய, மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி, உணவுப்படி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணப் பொருட்கள், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை அனைத்தையும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 46 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகளில் 10–ம் வகுப்பில் 7,268 மாணாக்கர்களும் 12ஆம் வகுப்பில் 5,290 மாணாக்கர்களும் என மொத்தம் 12,558 மாணாக்கர்கள் பயில்கின்றனர். இம்மாணாக்கர்கள் மார்ச் 2026-ல் அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்ள ஏதுவாக திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாலை நேரத்தில்
சிற்றுண்டி வகைகள்
மாணவர்கள் சோர்வடையாமல் இருந்திட மாலை நேரத்தில் சிற்றுண்டி வகைகள் கருப்பு கடலை, வெள்ளை கடலை, பச்சைப் பட்டாணி, வெள்ளை பட்டாணி, வேர்க்கடலை மற்றும் பச்சைப் பயிறு என இவற்றில் ஏதேனும் ஒன்று மாணாக்கர்களுக்கு சுவையாகவும் மற்றும் சத்துள்ளதாகவும் வழங்கப்படுகிறது.
அவ்வாறாக, இப்பள்ளியில் 10–ம் வகுப்பு பயிலும் 330 மாணவியர், 12–ம் வகுப்பு பயிலும் 516 மாணவியர் என மொத்தம் 846 மாணவியருக்கு மாலை நேர சிற்றுண்டி பயிர் வகைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறாக, சென்னைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் நல்ன் கருதியும் அவர்களின் தேவைகளை அறிந்தும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை மாணாக்கர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கபீர், உதவி கல்வி அலுவலர்கள் தணிகைவேலு, முனிராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





