சென்னை , நவ. 25:
சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் பெற ஏதுவாக பாடங்களை எளிதான முறையில் தயார்செய்து, வினா விடை தொகுப்பு முறையில் “எளிய கற்றல் கையேடு” (Easy Learning Materials) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதல்லவா? அதன்படி மேயர் ஆர். பிரியா, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “எளிய கற்றல் கையேட்டினை” மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.
இவ்வினா விடை தொகுப்பானது 2024–-25–ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகிதத்தை அளித்த ஆசியர்களைக் கொண்டு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10–ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வியில் பயிலும் 7,183 மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கும்,
12–ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வியில் பயிலும் 5,310 மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வணிகவியல், கணக்கியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய 10 பாடப்பிரிவுகளுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணைமேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் க.கற்பகம், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் எ.ஆர்.ஆர்.மலைச்சாமி, கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
![]()





