சென்னை, டிச. 30:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான சட்டசபை சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை, வேந்தரான கவர்னரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் அதில் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் நிதி செயலாளரை உறுப்பினராக சேர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு இருந்தன.
தமிழக சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும், அந்த சென்னை பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பி உள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் இந்த மசோதாவை ஜனாதிபதி, திருப்பி அனுப்பி இருக்கிறார். இதன் மூலம் இந்த சட்டத்திருத்த மசோதா அமலுக்கு வராத நிலை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விரைவில் தெரியவரும்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:-– பொதுவாக கவர்னர் ஒரு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினால், அரசு அதனை மீண்டும் 2-வது முறை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும்போது அந்த மசோதாவுக்கு கவர்னர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இது ஜனாதிபதிக்கு பொருந்தாது.
இந்த வேறுபாடு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் 201-ல் தெளிவாக உள்ளது. பிரிவு 200-ன் படி ஒரு மாநில சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டால், அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது ஒப்புதல் மறுத்து மீண்டும் பரிசீலனைக்காக சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். அவர் திருப்பி அனுப்பும் மசோதாவை, சட்டசபை திருத்தம் இல்லாமல் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதாவது கவர்னருக்கு 2-வது முறையில் ‘வீட்டோ’ அதிகாரம் இல்லை.
பிரிவு 201-ன்படி கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினால் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது ஒப்புதல் மறுக்கலாம் அல்லது மீண்டும் மாநில சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனால் ஜனாதிபதி மீண்டும் திருப்பி அனுப்பிய பிறகும், மாநில சட்டசபை அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் கூட ஜனாதிபதி கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதி இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]()





