செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் 1,323 மாணவர்களுக்கு பட்டங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜன.23-

சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 1,323 மாணவ–மாணவியருக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோவின் புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், பிரம்மோஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான பேராசிரியர் ஏ.சிவதாணுபிள்ளை பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் சிவதாணுபிள்ளை பேசியதாவது:-

விஞ்ஞானிகள், தலைவர்கள், என்ஜினீயர்கள், கலைஞர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும்போது நல்ல குடிமக்களாக வாழ கற்றல், அறிவு மேம்பாடு, புதுமையான மனப்பான்மை உள்ளடக்கிய ஆளுமை மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய உறுதியான நோக்கங்களுடன் இளைஞர்களின் மனதை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டியது அவசியமாகும். கல்வியை தனிப்பட்ட வெற்றிக்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் கிரகத்தின் சிறந்த நன்மைக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

தற்போது இந்தியாவில் 35 வயதுக்குட்பட்ட 8 கோடி இளைஞர்கள் உள்ளனர். நமது நாட்டின் இந்த மிகவும் மதிப்புமிக்க வளத்தை வளர்க்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில், உயர்கல்வி பெற்ற இந்தியாவின் திறமையான இளைஞர்கள் அறிவு பெறுதல், அறிவு வழங்குதல், அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.

இந்தியா இன்று உலகில் ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. இங்கு இளம் மற்றும் புத்திசாலித்தனமான ஆண்கள், பெண்கள் சிறந்த திறமையான வளம் உள்ளது. அறிவு சார்ந்த பொருளாதாரத்துடன் இந்தியா ஒரு வலுவான நாடாக மாறுவதற்கான வாய்ப்பை இது வழங்குவதால், இது நம் அனைவருக்கும் மிகப்பெரிய நன்மைக்கான நேரம்.

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளை மண்டியிட வைத்தது. வெளிநாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்திய மூளை மேற்கத்திய மூளையை விட தாழ்ந்ததல்ல. ஆனால் நாம் பல ஆண்டுகளாக ஒரு தோல்வி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டுள்ளோம். அது நம்மை பின்னுக்கு தள்ளுகிறது. வெற்றி மனப்பான்மையுடன் நாம் செயல்படும்பொழுது சரியான வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். நமக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. அது நம்மை இந்த உலகில் சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் வரவேற்றார். பதிவாளர் ரீட்டா ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *