செய்திகள்

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி துவக்கம் அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

Makkal Kural Official

சென்னை, ஜன.13-

சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துப்படுவது வழக்கம். முதல் பொருட்காட்சி கருணாநிதியால் 1974-–ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 50-வது ஆண்டில் இந்த பொருட்காட்சி அடியெடுத்து வைத்துள்ளது.

பொன்விழா பொருட்காட்சியை அமைச்சர்கள் இரா.ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு 50வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை பொன்விழா கொண்டாட்ட பொருட்காட்சியாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, அரசுத்துறை அரங்கங்கள் அமைக்க ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியது.

சென்னை தீவுத்திடலில் தொடங்கி உள்ள அரசு பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை, காவல்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 41 மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், சென்னை துறைமுகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 2 மத்திய அரசு அரங்குகள் உள்பட 43 அரங்குகள் இடம் பெற்றுள்ளது.

80 சிறிய கடைகள் மற்றும் 14 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்றுண்டி உணவகங்களும், ஓட்டல் தமிழ்நாடு உணவகமும் உள்ளது. இப்பொருட்காட்சி நடத்துவதன் மூலம் நேரடியாக சுமார் 6 ஆயிரம் பேரும், மறைமுகமாக 30 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

80 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 25-க்கும் மேற்பட்ட இதுவரை விளையாடி மகிழ்ந்திடாத சிறுவர் மற்றும் பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன. அதிரவைக்கும் பேய் வீடு, பனிக்கட்டி உலகம், 3டி ஷோ, பறவைகள் கண்காட்சி, வாட்டர் ரோல், கார்னிவல் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த பொருட்காட்சி வார நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இயங்கும். 70 நாட்கள் நடைபெற உள்ளது. பொருட்காட்சிக்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.40-ம், சிறுவர்கள் (4 முதல் 10 வயது வரை), பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.25-ம், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (சலுகைக் கட்டணம்) ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நுழைவுச்சீட்டினை வரிசையில் நின்று வாங்க முடியாதவர்களுக்கு வசதியாக டிஜிட்டல் தொழில்நுட்பம் “QR Code Scanning with UPI Payment Methods” மூலம் எளிதில் நுழைவுச்சீட்டினை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், www.ttdcfair.com என்ற இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டினை பெறலாம்.

பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள், தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஓய்வறை வசதிகள், வாகன நிறுத்துமிடம், காவல்துறை உதவிமையம், தீயணைப்பு வசதி மற்றும் சுற்றுலா உதவி மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 70 நாட்கள் வரை இந்த பொருட்காட்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சுற்றுலா துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் அ.சிவப்பிரியா, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் சி.லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *