செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் கோவிலில் அலை மோதியது பக்தர்கள் கூட்டம்

Makkal Kural Official

இன்று வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் அதிகாலை சொக்கவாசல் திறப்பு

கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷம்

சென்னை, டிச. 30–

இன்று (30ந் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. ‘ரங்கா, கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷத்துடன் பரமபதவாசல் வழியாக பக்தர்கள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை. அதன்படி இன்று அதிகாலை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீவல்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பார்த்தசாரதி கோவிலில்…

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி விழா கடந்த 20-ந்தேதி வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் பகல்பத்து திருவிழாக்கள் தொடங்கியது. பல்வேறு திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இராப்பத்து முதல் திருநாளான இன்று அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசலும் திறக்கப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘‘கோவிந்தா… கோவிந்தா…’’ என விண்ணெதிர கோஷங்களை எழுப்பி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. இன்று காலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடைபெறுகிறது.

இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

வருகிற 9-ந் தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குறிப்பாக 3-ந்தேதி ரத்ன அங்கி சேவையும், 5-ந்தேதி முத்தங்கி சேவையும் நடக்கிறது. தொடர்ந்து 6-ந்தேதியிலிருந்து 14-ந்தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவமும் நடக்கிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்…

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படுவதுமான திருத்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதிலும் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.

பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார். 2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருகை தந்தார்.

அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது ‘கோவிந்தா கோவிந்தா’ .. ரங்கா.. ரங்கா.. என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் முழக்கமிட்டனர். பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்தார். பட்டு வஸ்திரம் சாற்றுதல் நிகழ்ச்சிக்கு பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு வைபத்தையொட்டி நேற்று இரவே இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். இங்கேயே முகாமிட்டு பக்தர்களுக்கு உண்டான வசதிகள், முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் பரமபத வாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 5.30 மணிக்கு தமிழகத்தின் முதல் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பரமபத வாசல் அருகே அரையர் வியாக்ஞனமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் தில்லை

கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில்…

வைகுண்ட ஏகாதசியையொட்டி கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு இன்று காலை 5.50 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை கோவிந் தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.பின்னர், உற்வசர் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத் தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழுப்புரம் வைகுண்டவாசல்

பெருமாள் கோவிலில்…

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வந்து வசந்த மண்டபத்தில் அருள்பாலித்தார். கோயில் பட்டாச்சாரியார் கோபால், கோவில் உபயதாரர்கள், பணியாளர்கள் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதுபோல் திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயில் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில், கோலியனூர் வரதராஜ பெருமாள் கோயிலில் , காணை பெரும்பாக்கம் வேங்கட வரதராஜ பெருமாள் கோயிலிலும் அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவசால் திறப்பு நடந்தது. ராப்பத்து உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

காஞ்சி, மதுரை, சேலம்

பெருமாள் கோவில்களில்…

இதேபோல காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேலம் கோட்டை பெருமாள் கோவில், கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *