சென்னை, டிச. 19–
23-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை டூரிஸ்ட் பேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11ந் தேதி தொடங்கியது. சென்னை பிவிஆர் சினிமாஸில் நடைபெற்று வரும் இந்த விழா இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த விழாவில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3பி.எச்.கே. என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட்டு உள்ளன. இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு நடத்திய இந்த விழாவில் இன்று நடிகர் சசிகுமாருக்கு டூரிஸ்டு பேமிலி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறந்த நடிகை – லிஜோமோல் ஜோஷ் (காதல் என்பது பொதுவுடைமை), சிறந்த தமிழ்ப்படம் – பறந்து போ (ராம்), இரண்டாவது சிறந்த படம் – டூரிஸ்ட் பேமலி (அபிஷன் ஜீவிந்), சிறப்பு ஜூரி விருது – காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி), சிறப்பு ஜூரி விருது – ஷீலா ராஜ்குமார் (வேம்பு), சிறந்த ஒளிப்பதிவாளர் – எஸ்.பாண்டி குமார் (அலங்கு), சிறந்த எடிட்டர் – நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து) உள்ளிட்டோருக்கும் விருது வழங்கி கவுரவித்தனர்.
![]()





